சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை கோட்டையைச் சேர்ந்த தேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நான் வீட்டுக்கு சென்ற நிலையில், காலை 5 மணி அளவில் பிரியதர்ஷினி என்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினரின் அழுத்தமும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே பிரியதர்ஷினி பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாகப் பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க : சொத்து தகராறு: மகனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை