சிவகங்கை:திருப்பத்தூர் தங்கமணி தியேட்டர் எதிரே உள்ள கான்பாநகர் பகுதியில் கணவர் உயிரிழந்த நிலையில், சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர் ரஞ்சிதம்(52) இவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். கடந்த 7-ஆம் தேதி புதன்கிழமை வீட்டில் கால் நரம்பு, கை நரம்பு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய், குற்றவியல் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் தம்பி பாண்டி வேல்முருகனின் மனைவி நதியா(32) மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, நெடுமரத்தில் வசித்து வந்த நதியாவிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், ரஞ்சிதத்தின் தம்பி வெளிநாட்டில் பணி புரியும் நிலையில், நதியாவின் நடவடிக்கைகளை தனது தம்பியிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ரஞ்சிதத்தின் தம்பி மனைவி நதியா, அவரது திருமணத்தை மீறிய உறவில் இருந்த சூர்யாவிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 6-ஆம் தேதி இரவு சூர்யா, தலைமை ஆசிரியரின் வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து மறைந்திருந்தார். அப்போது ரஞ்சிதம் பாத்ரூம் சென்று விட்டு வீட்டுக்கு செல்லும் போது, ரஞ்சிதத்தை பின் தொடர்ந்த சூர்யா கைகளால் மூக்கையும் வாயையும் பொத்தி, கீழே தள்ளியுள்ளார். இதில் தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் மயங்கி கிடந்துள்ளார்.
அந்த சமயத்தில் பீரோவில் இருந்த சுமார் 60 பவுன் நகைகள் மற்றும் சுமார் ரூ 2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்ற பொழுது, மயக்கம் தெளிந்த நிலையில் தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் முனுங்கல் சத்தம் கேட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரஞ்சிதத்தின் கை நரம்பையும், கால் நரம்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை அவரது காதலியான நதியாவிடம் கொடுத்து வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், 60 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:காதலியின் மாமியாரை கத்தியால் குத்திய காதலன் - காதலிக்கு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்