சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசல்முன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் நிதி அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் இந்த தொகுதிக்காக எந்த திட்டமும் செய்யாதபோது அவரது மகன் எப்படி இந்த தொகுதிக்கு நல்ல திட்டங்களை செய்வார்.
எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஹெச்.ராஜா திறமையானவர். அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை அவர் கொண்டு வருவார். மற்ற தொகுதிக்கும் எடுத்துக்காட்டாக அவர் செயல்படுவார்.
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
திமுக கூட்டணி சுயநலனுக்கான கூட்டணி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. ஆனால் அதிமுக, ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றி விருது பெற்றுள்ளோம்.
தமிழ்நாட்டில் , 304 தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாடு வளர்ச்சியடைய, மோடி தலைமையிலான ஆட்சி அமைய அனைவரும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும்,சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜாவிற்கு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.