சிவகங்கை: மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் கருத்தகாளை, பஞ்சவர்ணம் தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த 30 ஆண்டு காலமாக மானாமதுரை மயானத்தில் பிணம் எரிக்கும் பணி செய்து தங்களின் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் கடைசி மகன் சங்கர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல் பட்டம் பெற்றுள்ளார். இவரே கருத்தகாளை குடும்பத்தில் முதல்பட்டதாரியும் ஆவார்.
கடுமையாக உழைக்கும் பட்டதாரி இளைஞர் இரவில் வெட்டியான் - பகலில் ஆசிரியர்
தனது குடும்ப வறுமை காரணமாக சிறுவயது முதலே பள்ளிக்குச் செல்வதுடன், மாலை நேரங்களில் தனது பெற்றோருக்கு உதவியாகப் பிணம் எரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். சங்கருக்கு கலை மீது ஆர்வம் அதிகம் என்பதனால், ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கினார்.
சங்கருக்குத் திருமணமான பின்பு வேலை இல்லாத காரணத்தால், தனக்குத் தெரிந்த ஓவியத்திறமையைக் கொண்டு, தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகத் தற்சமயம் பணிபுரிந்துவருகிறார். இதன்மூலம் அவருக்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால், இரவு நேரங்களில் மயானத்தில் பிணம் எரிக்கும் பணியில் தன்னுடைய தந்தைக்குத் துணையாகச் செல்கிறார்.
இந்நிலையில் தனக்கு அரசு உதவ முன்வந்தால் பேரூதவியாக இருக்கும் என்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு வழங்கினால் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளார். இவரது ஓவியத் திறமையை பல தனியார் அமைப்புகள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளன. இத்தகைய திறமைவாய்ந்தவரை அங்கீகரிக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: 'சிபிஎஸ்இ பாடத்தில் நானம்மாள் குறித்த பாடம் வந்துள்ளது மகிழ்ச்சி'