சிவகங்கை:உலகம்பட்டி அருகே அமைந்துள்ளது வாராப்பூர். இந்தக் கிராமத்தில் உள்ள பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை வசதிகளான கட்டிடம், போக்குவரத்து, நூலகம் என ஏதும் இல்லாததனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நிலையில் தவித்து வந்துள்ளனர். இதனால் இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
பள்ளியின் இந்த நிலையை அறிந்த தொழிலதிபரும், முன்னாள் மாணவருமான டாக்டர்.சேதுராமன், தான் படித்த அரசுப்பள்ளிக்கு உதவிடும் நோக்கிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும், 8 வகுப்பறை கட்டிடம், அதிநவீன கணினிகள், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுத்து உள்ளார்.
அந்தப் புதிய கட்டிடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர்.சேதுராமனின் மகனும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் குருசங்கர் உடனிருந்தார். தான் படித்த அரசுப் பள்ளிக்கு தொழில் அதிபர் டாக்டர் சேதுராமன் பள்ளி கட்டிடத்துடன், அனைத்து வசதிகளையும் செய்து தந்ததை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டி பேசினார். அதோடு வாராப்பூர் சுற்றுவட்டார மக்களிடையே இந்த செயல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.