சிவகங்கை அருகே குறைந்த தண்ணீரை பயன்படுத்தி உளுந்து, பச்சைப்பயிறு உள்ளிட்ட பலவகை பயிர்களை விளைவித்து அசத்திவருகிறார் ஒரு விவசாயி. சிவகங்கை மாவட்டம் ஒரு வறட்சியான மற்றும் வானம் பார்த்த பூமியாகும். நிலத்தடி நீர் பல அடி தூரம் குறைந்துவிட்டதால் மழையை நம்பி பிழைப்பு நடத்தும் நிலைமைக்கு இம்மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். ஆனால் பல வருடங்களாக மழை இல்லாததால் பலரும் விவசாயத்தை விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வறட்சியிலும் விவசாயத்தை கைவிடமாட்டேன் என்று வைராக்கியம் நிறைந்த மக்கள் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
வறட்சியிலும் விவசாயத்தை கைவிடாத விவசாயி; உதவுமா அரசாங்கம்?
சிவகங்கை: வறட்சியிலும் விவசாயத்தை கைவிடாத விவசாயி ஒருவர் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
அப்படி ஒருவர்தான் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அருகே உள்ள அஜீஸ் நகரைச் சேர்ந்த கணேசன். இவர் தன்னிடம் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். ஆனால் போதிய மழை இல்லாததால் பயிர்கள் அனைத்தும் கருகிபோனது. என்ன செய்வதென்று அறியாத கணேசன் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்கலாம் என்று எண்ணி ஆழ்துளை கிணறு அமைத்தார். ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி தனது நிலத்தில் பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கடலை, உளுந்து, சோளம், கடலை உள்ளிட்டவற்றை விளைவித்துள்ளார்.
ஆனால் மழை இல்லாததால் தனது சொந்த பயனுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தி வருவதாகவும் அரசு உதவி செய்தால் விவசாயத்தை கைவிடாமல் நெல் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய உள்ளதாக கூறினார். தங்களது நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் விவசாயம் செய்து வருவதாகவும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இதனை செய்து வருவதாகவும் கணேசன் தெரிவித்தார்.