சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கொந்தகை மட்டும் பழங்கால ஈமக்காடாகும்.
இப்பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே முதுமக்கள் தாழிகள் நிறைய கண்டறியப்பட்டன. தற்போது ஆறாம் கட்ட ஆய்வில் கொந்தகை பழங்கால ஈமக்காட்டிலும் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். இவற்றின் காலம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.