சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பேருந்து நிலையம், வாடியார் வீதி, பழனியப்பன் சந்து மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மொத்தம் 128 கடைகள் உள்ளன. இவைகளுக்கான வாடகை பாக்கி மட்டுமே நடப்பு ஆண்டு வரை மூன்றுகோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
பலமுறை நகராட்சி சார்பில் வாடகை செலுத்த அறிவுறுத்தியும் கடை உரிமையாளர்கள் இதுநாள் வரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. நேற்று ஜூன்.27ஆம் தேதி நகராட்சி ஆணையாளர் சாந்தி அறிவுரைப்படி மேலாளர் தனலெட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையம் அருகிலுள்ள பத்து கடைகளுக்குச் சீல் வைத்தனர்.
இம்மாத இறுதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடை திறக்க அனுமதிக்கப்படும் எனவும்; தவறும் பட்சத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மறு ஏலம் விடப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மற்ற கடைகளில் சீல் வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் பள்ளி செல்லும் மாணவர்களிடம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஆணையாளர் சாந்தி கேட்டுக்கொண்டார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, மஞ்சப்பை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் ரோடு: வீடியோ வைரல்