சிவகங்கை: தைத்திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்களில் களைகட்டி வருகிறது. குறிப்பாக, மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் கடந்த இரு நாட்களாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து, இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல், மத்திய மாவட்டங்களான திருச்சி சூரியூரில் நேற்றும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் வன்னியன் விடுதி என்ற கிராமத்தில் இன்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
அதேபோல், நேற்று மதுரை எலியார்பத்தியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அந்த வரிசையில், இன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெறுகிறது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெறும் மஞ்சுவிரட்டில், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்எல்ஏ எஸ்.மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், 8 மருத்துவக் குழுக்களும், சுமார் 1,000 காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அப்போது, மாடு முட்டியதில் ராகுல் (11) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். மேலும், நேற்று மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ரமேஷ் என்பவர் மாடு முட்டியதில் காயம் அடைந்து உயிரிழந்தார்.
அது மட்டுமல்லாமல், சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இவ்விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரலாற்று சிறப்புமிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு, சிறாவயல் கிராமத்தில் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள், அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி, பாதுகாப்புடன் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு, ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மதுரை, எலியார்பத்தி மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு..!