சிவகங்கை:பையூர் கிராமத்தில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293ஆவது பிறந்த நாள் விழாவானது அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று, வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், 'பொங்கல் பரிசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. வழக்கம்போல் அந்தந்த நியாயவிலைக்கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் என்றும்; 12 கோடி கரும்புகள் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் 2.19 கோடி கரும்புகள் பயனாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என்றும்; கரோனா நிவாரணத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக வழங்க கோரிக்கை விடுத்தோம் என்றும்; அதனை தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர் என்றும் பேசினார்.