சிவகங்கையைச் சேர்ந்த சுப்பையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ’நான் திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் 12ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டேன். திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் பதினேழு வார்டுகள் உள்ளன. இதில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், தமுமுக இரண்டு இடங்களிலும் சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. திமுக தான் திருபுவனம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுக தேர்தலுக்காக அனைத்து, கவுன்சிலர்களும் வந்திருந்தனர். காலை 11 மணிக்கு தேர்தல் என்ற நிலையில் 10:15 மணி அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தைக் காட்டி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இது ஏற்புடையதல்ல ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துள்ளனர். எனவே திருப்புவனம் யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி, மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், வழக்கறிஞர் குழு அமைத்து கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.