சிவகங்கை மாவட்டம்சாலைகிராமம் அருகே உள்ள சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. இதனை பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “உலகெங்கிலும் பொங்கல் பண்டிகை இந்து பண்டிகையாக, இந்து தர்மப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கருத்து திருடர்கள், தற்போது இந்துக்களின் பண்டிகைகளையும் திருட ஆரம்பித்து விட்டனர்.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று திருமூலர் சொன்னார். ஆனால், திராவிட கட்சியினர், அண்ணாதுரை சொன்னதாக கூறுகின்றனர். திமுக ஆட்சி, அனைத்து துறைகளிலும் தோற்றுப்போன ஆட்சி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கவில்லை.
அதேபோல் வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என கூறினர். ஆனால் தற்போது மின்சாரக் கட்டணத் தொகையை கூட்டியுள்ளனர். மேலும் சொத்து வரியையும் கூட்டியுள்ளனர். தற்போது கரும்பு கொள்முதலிலும் மோசடி செய்துள்ளனர். இவர்கள் திருட்டு ஆட்சி நடத்துகின்றனர்.