தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரவுடிகளை அலறவிட்ட ரியல் ஹீரோ' - கொலை முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு! - கனரா வங்கி

சிவகங்கை: வங்கிக்குள் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவரை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கும்பலுக்கு எதிராக வங்கி காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

shoot-to-prevent-murder-attempt

By

Published : Sep 18, 2019, 5:48 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் தங்கமணி (34). இவர் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கணேஷ் என்ற நண்பருடன் இன்று மானாமதுரையில் உள்ள கனரா வங்கிக்கு வந்துள்ளார்.

அப்போது இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்கமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற கணேஷையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த
வங்கி காவலாளி செல்லநேரு(40) கண்ணிமைக்கும் நொடியில் தனது கையில் வைத்திருந்த டபுள்பேரல் துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் கொலை செய்ய வந்த கும்பலைச் சேர்ந்த தமிழ்செல்வம் என்பவர் காயமடைந்தார். தொடர்ந்து அரிவாள் வெட்டுக்குள்ளான தங்கமணி, கணேஷ் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்செல்வம் ஆகியோரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின் அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொலை முயற்சியை தடுக்க துப்பாக்கிச் சூடு

இது குறித்து மானாமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் ஆய்வு செய்தார். கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி காவலரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழ்செல்வம் கடந்த மே 26ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட அமமுக ஒன்றிய செயலாளர் சரவணனிடம் கார் ஓட்டுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அச்சம்பவத்திற்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கொலை வழக்கில் தங்கமணி நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. அதே நேரத்தில் தங்கமணி நீதிமன்றத்தில் சரணடைந்து பின் ஜாமினில் வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் இக்கொலை முயற்சி அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வங்கி காவலாளி செல்லநேரு தனது சமயோஜித புத்தியால் துணிச்சலுடன் விரைந்து செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...

திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!

ABOUT THE AUTHOR

...view details