சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டு ராணுவத்தில் பணியாற்றும் 200 வீரர்கள் 'வைகை பட்டாளம் அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.
தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவு அளித்து, வீடு இல்லாதோருக்கு வீடு கட்டிக் கொடுத்து வருகின்றனர். கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டும் சேவை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ள காடனேரி கிராமத்தில் போதிய வருமானம் இன்றி மனநலம் பாதிக்கப்பட்ட, தனது மகனுடன் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார் என்பது இவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து வளர்மதியின் கோரிக்கையை கேட்டு அவருக்கு ரூ.36 ஆயிரம் செலவில், புதிய வீட்டினை நான்கு நாட்களுக்குள் கட்டி முடித்து புத்தாண்டுப் பரிசாக அவருக்கு வழங்கினர்.