சிவகங்கை:சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விண்ணப்பம் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என சிவகங்கை தொல் நடைக்குழுவினற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, "சங்க கால இலக்கியச் சிறப்பும், பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் பதினான்கினுள் ஒன்றாகவும், இன்றும் சிறப்பு மிக்க நகரமாக இயங்கி வரும் திருக்கானப்பேர் எனும் காளையார் கோவிலில் தொன்மையான மேடாக பாண்டியன் கோட்டை, சங்க கால கோட்டையின் எச்சமாக மண்மேடாய் காட்சி தருகிறது.
இந்த வட்ட வடிவிலான கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுவதோடு கோட்டையின் நடுவில் நீராவி குளமும் காணப்படுகிறது. சுமார் 37 ஏக்கரில் இக்கோட்டை மேட்டுப்பகுதியாக காணப்படுவதுடன், இதன் அருகே உள்ள ஊரும் மேட்டுப்பட்டி என வழங்கப்படுகிறது. பிற்காலங்களில் இப்பகுதியில் நாணயச் சாலை ஒன்று இயங்கி வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் கோட்டை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காவல் தெய்வங்களை வணங்குவது இயல்பு. இந்நிலையில் இன்றும் அதன் நீட்சியாக கிழக்கு பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோயில், தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் ஆகியன வழிபாட்டில் உள்ளன. பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககாலச் செங்கல் எச்சங்கள் கீழடியில் கிடைத்தது போன்று கையால் செய்யப்பட்ட மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சிறுவர்கள் விளையாடும் வட்டச் சில்லுகள், சிறிய அளவிலான உருண்டைகள், பந்து வடிவிலான மண் உருண்டைகள் போன்றவை மேற்பரப்பு கள ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதைத் தொடர்ந்து, கருப்பு, சிவப்பு நிற பானை ஓட்டில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்தில் மோசிதபன் என்னும் பெயர் பொறிக்கப் பெற்ற பானை ஓடு கிடைத்திருப்பது இப்பகுதி கீழடி போன்று பல வரலாற்றை சுமந்து இருக்கிறது என எண்ண வைக்கிறது. தொல்லியல் துறை இவ்விடத்தில் முறையான அகழாய்வை மேற்கொண்டால் பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்கள் கிடைக்கலாம், மேலும் தமிழக தொன்மையும் வெளிப்படும். ஆகவே இந்த இடத்தில் அகழாய்வு பணி தொடங்க வேண்டும்.
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் சிவகங்கை தொல்நடைக்குழு வழங்கிய இந்த விண்ணப்பத்தை கூர்ந்தாய்வு செய்து துறைக்கு அனுப்பி, துறையை முடுக்கி, முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்ய தகவல் அளித்து இருக்கிற தமிழக அரசுக்கும், தொல்லியல் துறை அமைச்சருக்கும் தொல்லியல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
இதையும் படிங்க: Trichy Aristo Bridge: இனி டிராஃபிக் ஜாம் இல்லை.. அரிஸ்டோ மேம்பாலத்தால் திருச்சி மக்கள் ஹேப்பி!