சிவகங்கை: தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் என்பவர் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவ்விடத்தில் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் கல்வட்ட தொல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவுநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கிலிருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோயில்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் புதிதாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கோயிலை ஒட்டி குவியலாகக் கிடைக்கும் கற்குவியலில் கல்லெழுத்து பொறிப்புடன் ஒரு கல் காணப்பெறுகிறது.
துண்டுக் கல்வெட்டு: கல்லெழுத்துப் பொறித்த இக்கல்வெட்டை வேறொரு பகுதியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இக்கல்லை நிலைக்கல்லின் மேல் பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம். இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்து காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
இதில் நாயனாருக்கு, கடமை, அந்தராயம் போன்ற வரி தொடர்பான சொற்களும் குறிச்சிகுளம் இசைந்த ஊரோம் போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் குறிச்சிகுளம் பகுதி இறைவனுக்குத் தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. சித்தலூரை அடுத்த குறிச்சி கண்மாய் எனும் பெயரில் கண்மாய் ஒன்று உள்ளது.
இக்கரையில் சிதைந்த நிலையில் துண்டு கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். ஆனாலும் அதற்கு போதுமான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை. இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோயிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம். கோவானூரிலும் குறிச்சிகுளம் எனும் பெயரில் குளம் ஒன்று இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முதுமக்கள் தாழிகள்:முத்தலூருக்கு செல்லும் முன்னே முத்தலூர் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் வெளிபரப்பில் அடுத்தடுத்து காணக்கிடைக்கின்றன. அகன்ற வாய்களைக்கொண்ட தாழிகளும் அதன் அருகே புதைக்கப்பட்டுள்ள சிறுசிறு பானைகளையும் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது.