சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சியில் 550 ஆண்டுகளுக்கு முன்பு வாணாதிராயர் குலத்தைச் சேர்ந்த மன்னர், பிராமணர்களுக்கு தானமாக அக்ரஹாரம் அமைத்துக் கொடுத்ததைக் குறிப்பிடும் புதிய கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன் ஆகியோர் பிராமணக்குறிச்சி தடியார் உடையார் ஐயனார் கோயில் முன்பு இருந்த கருங்கல்லை ஆய்வு செய்தனர்.
ஆறரை அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் 9 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்து, படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், “வாணாதிராயர்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர்.
பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்குக் கீழ் மதுரை அழகர் கோயில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி அரசு நடத்தியுள்ளனர். இவர்களின் கல்வெட்டுகள் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளன. இவர்கள் வைணவ மதத்தைப் பின்பற்றியவர்கள்.