சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வின் முக்கியத் திருப்பமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அமர்ந்த நிலையிலான எலும்புக்கூடு ஒன்று புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர் பிச்சப்பன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம், உதவி தொல்லியல் ஆர்வலர்கள் ஆசைத்தம்பி பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இன்று காலைமுதல் இந்த ஆய்வினை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கொந்தகை ஈமக்காடு அகழாய்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பங்கேற்றுள்ளனர்.
இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த ஈமக்காட்டில் முதல்நிலைத் தரவுகளும் இரண்டாம்நிலைத் தரவுகளும் கிடைத்துவருகின்றன. முதல்நிலைத் தரவுகளில் குறிப்பாக இன்று அமர்ந்த நிலையில் உள்ள எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.