சேலம்: சாமிநாதபுரம் அல்ராஜ் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (27). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடந்தது.
இவரது மனைவிக்கு பாலமுருகன் (22) என்ற இளைய சகோதரர் உள்ளார். இளம் வயதிலேயே பாலமுருகனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. இது குறித்து அக்கம்பக்கத்தினர், கோகுல்நாத்திடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து பாலமுருகனின் செயலைக் கண்டித்து, கஞ்சா போதைப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோகுல்நாத் பலமுறை மைத்துனர் பாலமுருகனைக் கண்டித்துள்ளார்.
கஞ்சாவை விட கோரியதால் கொலை
இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 30) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) அதிகாலை 5 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த கோகுல்நாத்தின் தலையில், பாலமுருகன் சுத்தியலால் பலமாகத் தாக்கியுள்ளார்.
அதில் பலத்த காயம் அடைந்த அவரை, பாலமுருகனின் தந்தை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே சுத்தியலால் தாக்கிய பாலமுருகனை, அவரது தாய் தந்தையரே பிடித்து அறையில் பூட்டிவைத்து, பள்ளப்பட்டி காவல் துறையினருக்குப் புகார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பாலமுருகனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு