உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டின் கோடை விழா, மலர்க் கண்காட்சியின் 43ஆவது ஆண்டு விழாவை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018 மே 12ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு மலர்க் கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஐஏஎஸ் தொடங்கிவைத்தார். அதன்பிறகு 2020ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்ததால் ஏற்காடு கோடை விழா, மலர்க் கண்காட்சி நடைபெறவில்லை.
கோடை விழா, மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்டத் தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் கூறுகையில், "ஆண்டுதோறும் கோடை விழா ஏற்காட்டில் மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். சென்ற ஆண்டு கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்ததால் விழா நடைபெறவில்லை.
ஆனால் இந்தாண்டு ஊரடங்கில் தளர்வுகள் உள்ளதால் விழா நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக பூங்கா சீரமைப்பு செய்யப்பட்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து, புதிய வகை மலர்ச் செடிகள் பூங்காவில் பதியம்செய்யப்பட்டு, வளர்க்கப்படுகின்றன.
10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பதியமிடப்பட்ட வகை வகையான பூஞ்செடிகள் தற்போது நன்கு வளர்ந்து பூப்பதற்குத் தயாராக உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அவை பூக்கும்.
கேலண்டுலா, கஜேனியா, டேலியா, வின்கா, மேரி கோல்டு, சால்வியா, ஐப்போன் சைட்ஸ், கைலார்டியா, டாயாந்தஸ், ஜெனியா, பேன்சி, சன்பிளவர், பால்கம், கோழிக் கொண்டை, ஆஸ்டர், ஓரியண்டல் லில்லி உள்ளிட்ட 20 வகையான கண்ணைக் கவரும் மலர்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தயாராகிவருகிறது.
அதேபோல வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணங்களில் கண்ணைக் கவரும் ரோஜாக்கள் செடிகளில் பூக்க தயார் நிலையில் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மலர்கள் இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
வரும் மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கோடை விழா, மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள்