சேலம் மாவட்டம் அடுத்த ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோவிலூர் மலைக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் மலைக் கிராமத்திற்குச் செல்லும் ஏழு கிலோ மீட்டர் தொலைவு உள்ள சாலை, சேறும் சகதியுமாக மாறி போய் உள்ளது. இதனால் பழுதடைந்த சாலையில் அப்பகுதி மக்கள் கயிறு கட்டி வாகனங்களை இழுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து கோவிலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த கோபி கூறுகையில்,
"எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் எங்கள் ஊருக்கு சாலை வசதி கிடையாது. அவ்வப்போது மாவட்ட நிர்வாக அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தார்ச்சாலை அமைப்பதாக கூறி செல்வார்கள். ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை.
மழையால் சேரும் சகதியுமான சாலை இதுதொடர்பாக சென்ற ஆண்டு ஈடிவி ஊடகத்தில் சாலை வசதி கேட்டு நாங்கள் கொடுத்த கோரிக்கை செய்தியாக வெளிவந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட தார் சாலை அமைக்கும் பணி, என்ன காரணத்தினாலோ தெரியவில்லை திடீரென்று கிடப்பில் போடப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது.
இதனால் கோவிலூரிலிருந்து வாழவந்தி, ஏற்காடு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. கூலி வேலைக்குக் கூட செல்ல முடியாமல் எங்கள் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகிறோம். இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாததால் உணவுப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவிக்கிறோம். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு சாலை அமைத்துத் தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கால்வாய் செல்லும் வழித்தடத்தில் சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!