உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டு பிரமாண்ட பேனரில் கைரேகை பதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விழிப்புணர்வு கைரேகை பதித்தார். பின்னர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆட்சியர் ரோகிணி, 'சேலம் மாவட்டத்தில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் நிலையங்கள், வெள்ளி பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் கூடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு தொழிற்கூடத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பணியாற்றுவது தெரிந்தால் அந்தத் தொழிற்கூட உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக சேலத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி, 'வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டு கல்வி பெற்று முன்னேற மாவட்ட நிர்வாகம் உதவிகள் வழங்கிவருகிறது. அவர்களின் பெற்றோருக்கும் 100 நாள் வேலைத்திட்டம் , சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் ஆகியவற்றின் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது' என்று அவர் தெரிவித்தார்.