சேலம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் ராமன் மற்றும் ராஜசேகரன். இவர்கள் இருவரும் கந்தம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சாயப்பட்டறைக்கு விறகுக் கட்டைகளை லாரியில் ஏற்றிச் சென்றனர்.
லாரியை ஓட்டுநர் முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியின் மேல் பகுதியில் விறகு பாரத்தின் மீது ராமன் மற்றும் ராஜசேகரன் அமர்ந்திருந்தனர்.
அப்போது கந்தம்பட்டி சாயப்பட்டறை முன்பு சாலையில் குறுக்கே உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக இருந்தை கவனிக்காமல் லாரியை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் சென்றவர்கள் லாரி மின்கம்பத்தில் உரசுகிறது என எச்சரிக்கை செய்தனர்.
இதனையடுத்து மேற்கொண்டு செல்ல, உயர் மின்கம்பியை மரக் குச்சியைக் கொண்டு ராஜசேகரன் உயர்த்தி பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி ராமன் மீது உரசியதில், அவர் தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் ராஜசேகரன் மற்றும் ஓட்டுநர் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் ராமனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்!