திருச்சி மாவட்டம் ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்-கோமதி தம்பதி. கடந்த டிசம்பர் மாதம் ஊரக்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
ஆனால், ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோமதி, தனது பெண் குழந்தைகளுடன் சேலம் சென்றார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோமதி தனது குழந்தைகளுடன் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டார்.