சேலம்: அழகாபுரம் அடுத்த மிட்டாபுதூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (34). இவரது கணவர் வெங்கடேசன் (40). தென்னாப்பிரிக்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேலைக்காக கணவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது தங்கை கணவர் குமரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
இந்த தகவல் தென்னாப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி அன்று சொந்த ஊர் திரும்புவதற்காக வெங்கடேசன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை குமரன் நேரில் சென்று அழைத்து வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மனைவியை பார்க்க வீட்டிற்குச் சென்ற வெங்கடேசன், குமரனுடன் இருக்கும் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக, கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்து வாக்குவாதத்தில் தலையிட்ட குமரனுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குமரன் இரும்பு கம்பியால் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.