சேலம்: திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் அதிமுக மாநகர் மாவட்ட, சூரமங்கலம் பகுதி, கழகம் ஒன்று மற்றும் இரண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், " பூத் கமிட்டி எந்த அளவுக்கு வலிமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில், தகுதி வாய்ந்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக நீக்க வேண்டும். தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு நமக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்க செய்ய வேண்டும். இந்தப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தினால் நமது வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும்.
இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றதாக கூறுகின்றனர். 10 சதவீதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்களிடம் அழகாக பேசுவார்கள். அதனை பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும். எதிரிகளும் மூக்கின்மீது விரல் வைக்கும் அளவுக்கு நல்லாட்சியை தந்தது அதிமுக அரசு. இப்போது திமுகவிற்கு வாக்களித்துவிட்டு வேதனைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று மக்கள் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
வரி அதிகரிப்பு செய்த திமுக:கொரோனா தொற்றுக்காலம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த வேளையில், பொதுமக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது திமுக ஆட்சி. மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழில் வரியை, சமானிய மக்களின் நிலைக்கு அதிகமாக பல மடங்கு உயர்த்தி உள்ளனர். தேர்தல் நேரத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் இப்போது அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகளில் மட்டுமே செல்ல முடியும் என்ற நடைமுறையை செயல்படுத்தி உள்ளனர். இது ஏமாற்றும் செயலாகும்.
நகை கடனில் திராவிட மாடல் ஆட்சி:தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி என்றார்கள். இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் என்று கூறுகிறார்கள். திமுக வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் அவர்களது நகையை அடகு வைத்தனர். அதில் 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி ஆனது. கிட்டதட்ட 35 லட்சம் பேர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் அந்த நகையை மீட்க முடியாமல் உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடையாளம்.
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை: அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று கூறிவிட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு என்று கூறுகின்றனர். 10 ஏக்கர் நிலம், கார் வைத்துள்ளவர்களுக்கு எல்லாம் கொடுத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. 12 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கியது அதிமுக அரசு.120 கோடியில் பிரம்மாண்டமான சட்டக் கல்லூரியை கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. திமுக ஆட்சி பொறுப்பேற்று, இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன திட்டத்தை தந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் திறந்து வைக்கின்றனர்.
அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் இப்போது, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, முதியோர்களை கொலை செய்து நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சா போதையினால் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். இந்த கஞ்சா போதை ஆசாமிகள்தான், அங்கே வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் சொல்கின்றன. இப்படிப்பட்ட அரசாக தான் விடியா தி.மு.க அரசு உள்ளது.
விடியா திமுக அரசு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கழக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது, இதுதான் அவர்கள் செய்யும் செயல். அதிமுக ஆட்சியின் போது எதற்கும் துணிந்து போராடப்பட்டு, ஜனநாயக ஆட்சிமுறையாக நடந்தது. இப்போது போராட்டங்களை கண்டு அஞ்சுகின்றனர். அதனை எதிர்கொள்ள திமுக அரசுக்கு தைரியம் இல்லை. மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோதம். தேர்தல் நேரத்தில் வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.இந்த திட்டங்களுக்காக மக்கள் அதனை எதிர்த்து போராடுகின்றனர்.
அதிமுக ஆட்சி தமிழக மக்களை கடனாளியாக வைத்துள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினர். திமுக ஆட்சிக்கு வரும்போது, 2021இல் 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் இருந்தது. இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 2 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். எந்த புதிய திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் புதிய சாலைகள், புதிய கல்லூரிகள், கால்நடை பூங்கா, தமிழகம் முழுவதும் பாலங்கள் உள்பட ஏராளமான திட்டங்களை தந்தோம்.
திமுக ஆட்சியில் மக்கள் பயன்பெறும் எந்த திட்டமும் செய்யவில்லை.