சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களை அடுத்து, அண்மையில் எக்ஸ்பிரஸ்வே என்ற பெயரில் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் விளைநிலங்களை அழித்து விட்டு, எட்டு வழிச்சாலை திட்டம் அல்லது பசுமை வழி எக்ஸ்பிரஸ்வே என எந்த பெயரில் புதிய சாலை அமைக்கப்பட்டாலும், அதனை சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் எதிர்ப்போம், தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவோம் என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் விளைநிலங்களை அழித்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, நீர்நிலைகளை சூறையாடி, மலைகளைக் குடைந்து, குடிநீர் கிணறுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்விடங்களை காணாமல் ஆக்கி நிறைவேற்றப்படவுள்ள நாசகார திட்டம். இந்த திட்டத்தினை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல பல்வேறு சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலைகள் உள்ளன. ரயில் பாதைகள் உள்ளன. அவற்றை நவீனபடுத்தியும் அகலப்படுத்தினாலுமே சேலத்திலிருந்து சென்னைக்கு மிக விரைவாக சென்று விட முடியும். ஆனால் எட்டு வழிச்சாலை திட்டத்தை மட்டுமே நிறைவேற்றுவோம் என்று மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக இருப்பது விவசாயிகளை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கி உள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு நடத்தி வருகிறோம். நீதியரசர்கள் எங்கள் பக்கம் இறுதி தீர்ப்பினை அளிப்பார்கள் என்று நம்புகிறோம். எங்கள் உயிரை கொடுத்தாவது எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் வரவழைத்து சேலத்தில் மிகப்பெரிய அளவில் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
பயண தொலைவு குறையும், எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று கூறிய தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே மும்முரமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எந்த நேரமும் மத்திய, மாநில அரசுகள் எட்டு வழிச்சாலை திட்டத்தை வேறு எந்த வடிவிலும் நிறைவேற்றும் என்ற அச்சத்திலேயே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து சேலம் மாவட்டம் பூலாவரி பஞ்சாயத்தை சேர்ந்த கலா கூறுகையில், "எங்களுக்கு பூலாவரி ஆத்துக்காடு பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே எட்டு வழிச்சாலை செல்ல உள்ளது. அதற்கான கணக்கீடு பணி முடிவடைந்து உள்ளது. ஆனால், சாலை அமையும் பட்சத்தில் நாங்கள் சாலையின் மறுபுறம் இருக்கும், எங்கள் நிலத்திற்கு 20 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டும் என்று அலுவலர்கள் கூறுகிறார்கள். எப்படி நாங்கள் பிழைப்பது, விவசாயத்தைத் தவிர வேறு தொழில் எங்களுக்குத் தெரியாது. இருக்கும் ஒரே வாழ்வாதாரமான விளைநிலத்தை விட்டு நாங்கள் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது. எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் இதுபோல மற்றொரு விவசாயி முத்துசாமி கூறுகையில், "எனது நிலத்தில் இருந்த பாறைகளை தகர்த்து சமமாக்கி நிலத்தை விளை நிலமாக அமைத்திருக்கிறேன். இதற்கான செலவு அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக எட்டு வழிச்சாலை செல்லும் என்று அலுவலர்கள் கூறுகிறார்கள். இந்த தகவல் கேள்விப்பட்டதில் இருந்து எனது மனைவி மிகவும் நொடிந்துபோய் கைத்தடியை ஊன்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த பகுதியை விட்டுவிட்டு நாங்கள் வேறு எங்கும் சென்று பிழைக்க முடியாது. முதலமைச்சர் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்கிறார். எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலைமையையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான ஒரே நம்பிக்கையான விளைநிலங்களை பாதுகாத்து மாற்று வழியில் சாலை போக்குவரத்தை அமைக்க அரசு தீர்வு காணவேண்டும் என்று விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க:தடைகளை தன்வசப்படுத்திய பெண்: இயற்கை விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி!