மத்திய பாஜக அரசு நேற்று முன்தினம் (பிப். 1) 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் இந்தாண்டு தொடங்கப்படும். அதற்கான டெண்டர்கள் விடப்படும்' என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக, சேலம் வீரபாண்டி பகுதியில் உள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்தகட்ட தொடர் போராட்டத்திற்குத் தயாராகிவருகின்றனர்.
இது குறித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் கூறுகையில், "எட்டு வழிச்சாலை விவசாயிகளுக்காகப் போடப்படுகின்ற சாலை இல்லை. தனியார் முதலாளிகளுக்காகப் போடப்படும் சாலை.
இதில் எந்த ஒரு விவசாயியும் பலனடையப் போவதில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் (தரகு) கிடைக்கும் என்ற ஒற்றை நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் திட்டத்திற்குத் தலையாட்டிவருகிறார்.