சேலம்: புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓமலூர் பகுதியில் உள்ள அக்கட்சியின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர் சேர்ப்பது இலக்காக கொண்டு அதிமுக செயல்படுகிறது.
மிகப் பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார். கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்.
நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் போது பார்த்து பேச வேண்டிய நிலை உள்ளது. கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது. பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இதிலிருந்து அவர் அதிமுக ஆட்சி இருக்கும் போது எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.