மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில், கிழக்கு கரை கால்வாய் பாசனப்பகுதியில் 27ஆயிரம் ஏக்கரும், மேற்கு கரை கால்வாய் பாசனப்பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பகுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சேலம் ஆட்சியர் சி.அ.ராமன், மாநிலங்களவை உறுப்பினர் எ. சந்திரசேகரன், மேட்டூர் எம்எல்ஏ செ.செம்மலை, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஆக.17) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 443 ஏக்கர் நிலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்களும் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 327 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளிகளை பொருத்தமட்டில் முதலமைச்சர் ஆணைப்படி இன்றிலிருந்து மாணவர் சேர்க்கை பணி தொடங்குகிறது. அதேபோன்று ஒரு பள்ளியிலிருந்து மற்றொறு பள்ளிக்கு செல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
10 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்கள் 24ஆம் தேதியிலிருந்து எந்தந்த வகுப்பில், எந்தந்த பள்ளிகளில் சேர விரும்புகிறார்களோ, அந்த பள்ளிகள் அல்லது அருகாமையில் இருக்கும் பள்ளிகளில் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:தென்னக ரயில்வே பணிக்கு வெறும் 17 தமிழர்கள் தேர்வு... தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?