சேலம்: ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான 'சேகோ' எனப்படும் மரவள்ளிகிழங்கு அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, ஆலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துவதாலும், ஆலைகளில் இருந்து வெளியேறும் நீரை சுத்திகரிக்காமல் கால்வாய்களில் கலப்பதாலும் நீரானது மாசடைந்து காணப்படுகிறது.
இதனால், துர்நாற்றம் ஏற்பட்ட காற்றை சுவாசிப்பதோடு, பல்வேறு வகையான நோய்தொற்றுகளுக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் இது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், காட்டுக்கோட்டை ஊராட்சியில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் ஆலை அமைக்க, சேலம் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது.
சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு:இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் இன்று (ஆக.25) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தனியார் ஆலை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சரவணன் கூறுகையில், “முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து வருகிறோம் எனவும், இந்த நிலையில் மிகப்பெரிய தனியார் சேகோ ஆலை எங்கள் ஊரில் நிறுவினால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் அருகே உள்ள கல்லாறு, வசிஷ்ட நதி மற்றும் பாசன வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து அந்நீரையும் அவை மாசுபடுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.