சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பிச்சம்பாளையத்தில், 1986ஆம் ஆண்டு 'டேனிடா' நல்வாழ்வுத் திட்டத்தின்கீழ், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துணை சுகாதார நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் இக்கட்டடத்தின் உள்பகுதியிலுள்ள அறைகள் நெடுங்காலமாக பூட்டப்பட்டு, அதிலுள்ள ஜன்னல்கள் துருப்பிடித்தும், உள்பகுதியில் புதர் மண்டியும் கிடக்கிறது. மேலும் அங்கு அவ்வப்பொழுது சமூகவிரோதிகள் ஒன்றுகூடி மது அருந்தி, காலியான மதுப்பாட்டில்களை வீசிச்செல்வதால், அப்பகுதி முழுவதும் குப்பை கூளமாகக் காட்சியளிக்கிறது என பிச்சம்பாளையம் ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசு துணை சுகாதார நிலையத்தின் முன்புறத்திலுள்ள இரு அறைகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. வாரம் ஒருமுறை, செவிலியர் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி, தாய்மார், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பிச்சம்பாளையம் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவை என்றால், இந்த அரசு துணை சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்படமுடியாத சூழல் இருப்பதாகவும் ஊர் மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கூறுகையில்,"கடந்த இருபது ஆண்டுகளுக்கும் முன்பு வரை இந்த அரசு துணை சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வாரம் ஒருமுறை மட்டுமே மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அவசர மருத்துவ உதவி வேண்டும் என்றால், எங்கள் கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தள்ளி உள்ள சேலம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி ஆகியப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தான் செல்ல வேண்டும்.