சேலம்:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலத்திற்குப் பயணம் மேற்கொண்டார். மதியம் ஒரு மணி அளவில் சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவருடன் சேர்ந்து நின்ற ஆளுநர், காவல்துறையினர் செலுத்திய மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் துணைவேந்தர் ஜெகநாதன் அறையில் அமர்ந்து அவருடனும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்களுடனும் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தினார். தொடர்ந்து அவர் கார் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்றார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பூட்டர் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.