சேலம்:சேலம் மாவட்டம், பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (46). இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அப்பகுதி பெண்களிடம் மகளிர் சுய உதவிக் குழு அமைத்து, தேசிய வங்கிகள் மற்றும் தாட்கோ நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். மேலும், இதில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50 லட்சம் கிடைக்கும், 50 சதவீதம் அரசு மானியம் கிடைக்கும் என்று கூறி, அவர்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
காயத்ரி தன்னை சமூக நலத்துறை அதிகாரி என்றும், அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருகிறேன் என்றும், சமூக நலத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியிடம், பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புகாரை விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், காயத்ரியுடன் பணம் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக அவருடன் இருந்த அவரது கார் ஓட்டுநர் லெனின் மற்றும் உதவியாளர் இளமாறன், தோழி சாவித்திரி ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையைத் தவிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக காயத்ரி தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், காயத்ரி சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சேலம் தனிப்படை போலீசார், சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அசோக் நகர் பகுதியில் பதுங்கி இருந்த காயத்ரியை கைது செய்துள்ளனர். பின்னர் காயத்ரி சேலம் அழைத்து வரப்பட்டு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, காயத்ரி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், காயத்ரி ரூபாய் 20 லட்சம் வரை மோசடி செய்து இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும், காயத்ரியால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரூர் மணல் குவாரிகளில் 4வது முறையாக அமலாக்கத்துறை சோதனை!