சேலம்: கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. அதில் மக்களிடம் மனுக்கள் பெறவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், 10 அடி நீள அகலத்தில், இரண்டு அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்த அந்த விழாவில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், வீரபாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து, டி.ஆர்.ஓ மேனகா உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக, திமுக மற்றும் அதிமுக கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மேடையில் இருபுறமும் ஏறினர்.
இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. அப்போது நிலைகுலைந்த ஆட்சியர் கார்மேகம் கீழே சரிந்தார். அதனை உணர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஆட்சியர் கைகளைப் பிடித்து தூக்கினார். இதனால் விழாவில் அதிகாரிகளிடையே பதற்றம் நிலவியது. எனினும், அதே மேடையில் விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி வி.ஏ.ஓ. கண்ணனை சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டார்.