சேலம்:விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியும், வழக்கறிஞர் பாலுவை தரக்குறைவாக பேசி உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.
அதேநேரம், இது தொடர்பாக திருமாவளவனின் பேச்சு வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்போது வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் மு.கார்த்தி, திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நேற்றைய முன்தினம் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை நேற்று (ஜூன் 15) பிற்பகல் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், இந்த அவதூறு வழக்கினை விசாரிக்கும் நீதிபதி யுவராஜ் முதற்கட்டமாக கார்த்தியின் புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதேபோல், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே வழக்கு தொடுத்த கார்த்தி நீதிமன்றத்திற்கு வர உள்ளதால், 'நமது பலத்தை நிரூபிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் நீதிமன்றத்தில் கூடுமாறு' என அச்சுறுத்தும் வகையில் அதன் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததாக தகவல் வெளியானது.