அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினரின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்கள் சௌமியா தத்தா, நாகராஜன், கே.கே. நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வங்கிகள் இணைப்பால் பல்வேறு புதிய பிரச்னைகள்...! - வங்கி அலுவலர்கள் எச்சரிக்கை
சேலம்: பொருளாதாரச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக வங்கிகளை இணைத்து பல்வேறு புதிய பிரச்னைகளை மத்திய அரசு ஏற்படுத்திவருவதாக வங்கி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன், “வாடிக்கையாளர்களுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் மட்டுமே சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு இந்திய பொதுத் துறை வங்கிகள் சாட்சியாக உள்ளன. ஆனால், மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க முயல்கிறது.
அதன் முதல் கட்டமாக பொதுத் துறை வங்கிகள் சிலவற்றை இணைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை வங்கிகள் இணைப்பின் மூலம் ஏற்படுத்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், வங்கிகள் இணைப்பை திரும்பப் பெறக் கோரியும் வரும் 26, 27 ஆகிய இரண்டு தேதிகளில் நாடு முழுவதும் வங்கி அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றார்.