சேலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் மற்றும் அவரின் பாட்டியை, தந்தை தண்டபாணி கொடூரமாக கொலை செய்தார். இந்தத் தாக்குதல் நடந்தபோது, அதனை எதிர்த்துப் போராடிய சுபாஷின் மனைவி அனுசுயா, காயங்கள் உடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் பாதிக்கப்பட்ட அனுசுயா, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று (ஏப்ரல் 20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21) இதே போன்ற ஆணவப் படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பிய உடுமலை கௌசல்யா, அனுசுயாவைப் பார்க்க சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவரை அனுசுயா சிகிச்சைப் பெற்று வரும் வார்டுக்குள் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனால் அங்கிருந்து வெளியேறிய கௌசல்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கெளசல்யா, “கணவரை ஆணவப் படுகொலையால் இழந்து விட்டு உயிருக்குப் போராடி வரும் சுபாஷின் மனைவி அனுசுயாவைப் பார்ப்பதற்கு, எனக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. நான் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டேன். அதேபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட என்னை, அனுசுயாவைப் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இதை வன்மையாக கண்டிக்கிறோம். அனுசுயாவை நேரில் சந்திக்க அனுமதித்தால், பிரச்னை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. மருத்துவ காரணங்களுக்காக அனுமதிக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நான் பார்த்தாலே பிரச்னை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.
இதற்கு முறையான நீதி என்பது ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றினால் மட்டுமே கிடைக்கும். ஆணவப் படுகொலை நடந்தும், தமிழ்நாடு அரசு மெளனம் காக்கிறது. அதனால், சாதியத்திற்கு அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தனிச் சட்டம் இயற்ற மாட்டோம், இதைப் பற்றி கவலை இல்லை என்று அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.