சேலம்:தமிழ்நாட்டில் அரசியல் செய்வது சங்கிகளுக்கு எளிதான காரியம் அல்ல என்றும், பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இன்னும் அவர் உள்ளார் என்றும், தேர்தலில் அரசியலில் ஈடுபடாத பல திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து திராவிட மாடல் அரசை வழிநடத்த வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 'இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு' நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி ஆகிய இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''இரண்டு தலைப்புகள் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி ஆகியவை தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி முடித்துவிட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு வாங்கி, ஒவ்வொரு ஒன்றியங்களாக தமிழ்நாடு முழுவதும் சென்று பயிற்சி பாசறை நடத்த உள்ளோம்.
அமைச்சராக இல்லாமல் திராவிடக் கொள்கையில் பிடிப்பு உள்ளவனாக, பகுத்தறிவாளானாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். கருணாநிதி இளமைக்காலத்தில் சேலத்தில் இருந்தபோது, 'சென்னை மாகாணம்' ஆகவும்; இப்போது அவரின் பேரன் என் காலத்தில் 'தமிழ்நாடு' ஆகவும், இன்னும் சொல்லவேண்டுமெனில் நமது பேரன், பேத்தி காலத்திலும் தமிழ்நாடாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாநாடு நடக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரைப் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டம் சரியில்லை, ஜாதகம் சரியில்லை, தமிழ்நாட்டிற்கு முதலமைச்சரே ஆக முடியாது என்றெல்லாம் கூறினர். ஆனால், அவற்றையெல்லாம் தனது உழைப்பால் தவிடு பொடியாக்கி வென்று காட்டியதோடு, நாடு போற்றும் 'திராவிட மாடல்' அரசை அவர் தற்போது நடத்துகிறார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு இன்னும் சிறப்பு என்றால், மற்ற மாநிலத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிசவாதிகள், அரசியல் எதிரிகள். ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் கொள்கை எதிரிகள்.
எவ்வளவோ முயன்று பார்க்கிறார்கள், அதிக செலவு செய்து பார்க்கிறார்கள், என்னென்னவோ வியூகங்கள் வகுத்து பார்க்கிறார்கள், மாநிலத் தலைவர்களை எல்லாம் ஆட்டிப் பார்க்கிறார்கள், இருந்தாலும் பாசிச சக்திகளால் தமிழ்நாட்டில் அடியெடுத்து வைக்க முடியாது. அவர்களின் கண்ணுக்குத் தெரியாத தடுப்புச்சுவர் பாதுகாத்து வருகிறது. அந்த சுவற்றில் மோதி மூக்குடைந்து கிடக்கிறார்கள். அந்த சுவரின் பெயர் தான் 'தந்தை பெரியார்' (Thanthai Periyar E.V.Ramasamy).