சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் (16), பவித்ரா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நவீன்குமார் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதேபோல், அதேபகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் சஞ்சய் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தாரமங்கலம் அருகேயுள்ள பெரியாம்பட்டி ஏரிக்கு நவீன்குமார், சஞ்சய் உட்பட ஐந்து சிறுவர்கள் சேர்ந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஏரியில் மீன் கிடைக்கவில்லை. இதனால், குளிக்கலாம் என்று எண்ணி சிறுவர்கள் அனைவரும் ஏரியில் குதித்துள்ளனர். அப்போது, இரண்டு சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட மற்றச் சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு, அங்கிருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் உடனடியாக ஏரியில் வந்து பார்த்தபோது சிறுவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் சிறுவர்களை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.