தமிழ்நாடு

tamil nadu

காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!

By

Published : Aug 21, 2020, 7:53 PM IST

சேலம் : உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Love marriage couple
Love marriage couple

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரின் இரண்டாவது மகன் ராமதாஸ்.

இவர், சேலத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவரும் பக்கத்து ஊரான மன்னார் பாளையம் பகுதியில் வசித்து வரும் ரத்தினவேல் என்பவர் மகள் பிரியாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பிரியா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .

ராமதாஸ் குடும்பத்தினர் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் , இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இவர்கள் இரண்டு பேரும் வீட்டைவிட்டு வெளியேறி, இன்று (ஆக.21)காலை நங்கவள்ளி நரசிம்மர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்தை மணமகன் வீட்டார் ஏற்காமல் இவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த நிலையில் இவர்கள் இரண்டு பேரும் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சியின் மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் ஷர்மிளா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவானது.

இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இன்று (ஆக.21) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

இதையடுத்து காதல் ஜோடிகளுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க சேலம் மாநகர காவல்துறை கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details