சேலம்: ஓமலூர் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம். இதில், பதவி உயர்வு மற்றும் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும், பல்கலைக் கழக நிர்வாகம், இந்துத்துவ கருத்துகளைத் திணிக்கும் விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், பெரியாரின் சிலையை மறைக்கும் வேலையையும் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் (ஆகஸ்ட் 16) பெரியார் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற இருந்தது. அதற்காக பல்கலை கழகப் பதிவாளர் பெயரில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கலைஞர் ஆய்வு மையத்தில் இப்படியொரு தலைப்பா?
அதில், பெரியார் பல்கலைக்கழக கலைஞர் ஆய்வு மையத்தின் சார்பாக ஆட்சிப்பேரவை கூடத்தில் வேதசக்தி வர்மக்கலையும் பண்பாட்டுப் பின்புலமும் என்ற தலைப்பில் பேராசிரியர் ந. சண்முகம் சிறப்புரை நிகழ்த்த உள்ளார் என்றும் மேற்கண்ட நிகழ்விற்கு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திவிக தலைவர் கொளத்தூர் மணி இது தொடர்பான விளம்பர பதாகையும் பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு குறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலை தளங்கள் மூலமாகவும், துணைவேந்தரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டும் எதிர்ப்பு கருத்துகளைப் பதிவு செய்தனர். இதனால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
பல்கலைக்கழகத்தை எதிர்த்துப் போராட்டம்
இந்நிலையில், பெரியார் பல்கலைக் கழகத்தின் மதவாத சார்பு, சமூக அநீதிப் போக்கை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் பல்கலை கழகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் , ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட பொருப்பாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்கலை கழகத்தின் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
திராவிடர் விடுதலைக் கழகம் முதலமைச்சர் நடவடிக்கைஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவிக தலைவர் கொளத்தூர் மணி, "அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகள் கூடாது என்ற ஒன்றிய, மாநில அரசுகளின் விதிகளை மீறி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆயுத பூஜை நடைபெறுகிறது.
முதலமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்
பெரியார் சிலையை மறைக்கும் நோக்கில் உயரமான தோரணவாயில் அமைக்கப்பட்டுவருகிறது. துணைவேந்தர் அலுவலகத்தில் இருந்த பெரியார் படத்தை நீக்கிவிட்டு, சரஸ்வதி படமும், பகவத்கீதையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அனைத்து செயல்பாடுகளும் அமைச்சரவையின் ஆலோசனையிலேயே நடைபெற வேண்டும் என்ற அரசியல் சட்ட நிபந்தனைக்கு மாறாக பல்கலைக் கழகங்களில் மட்டும் தனி அதிகாரம் பெற்றிருப்பது எப்படி?
இதை பொது தளங்களில் விவாதமாக்க வேண்டும். மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அதற்கான முனைப்பை முன்னெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'மனுதர்ம நூலை எரிப்போம்' - கொளத்தூர் மணியின் 'தீ' பேச்சு!