சேலம் தாதகாபட்டியில் நேற்று (மார்ச் 25) அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்," தமிழ்நாட்டில் பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர்.
அது ஒரு போதும் நடக்காது. சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தநிலையில், குருட்டு வாய்ப்பில் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முதல் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.
ஊழலில் கருணாநிதியையே மிஞ்சிவிட்டனர். தினமும் திமுகவினர் எப்படி ஊழல் செய்யலாம் என்று எடப்பாடியை பார்த்துத்தான் பாடம் படிக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடியட்டும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, டி.டி.வி.தினகரன் பரப்புரை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான். எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில், இந்த இட ஒதுக்கீட்டை பழனிசாமி வழங்கி இருக்கிறார்.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வரப்போகிறது. திமுக தப்பித் தவறி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. அமமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றுவோம். தொழில், விவசாயம் வளர்ச்சி பெறவும், தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் " எனத் தெரிவித்தார்.
தாதகாபட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்புரை பரப்புரையின் போது, எஸ்.கே.செல்வம் (வீரபாண்டி), எஸ்.இ.வெங்கடாசலம் (சேலம் தெற்கு), எஸ்.மாதேஸ்வரன் (ஆத்தூர்), பாண்டியன் (கெங்கவல்லி), சி.நடராஜன் (சேலம் வடக்கு), கே.கே.மாதேஸ்வரன் (ஓமலூர்), பூக்கடை சேகர் (எடப்பாடி), செல்லமுத்து (சங்ககிரி), ரமேஷ் அரவிந்த் (மேட்டூர்) மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (சேலம் மேற்கு), கே.சி.குமார் (ஏற்காடு) ஆகியோர் ஆதரித்து தினகரன் வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தாமரையை மலரச் செய்வோம் - பாஜக அறிவுசார் பிரிவு ஆலோசனைக் கூட்டம்