சேலம் மாவட்டம் ஓமலூர்,காடையாம்பட்டி வட்டாரங்களில் தேசிய நெடுஞ்சாலையும், மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இந்த சாலைகளின் விரிவாக்கப் பணிகளுக்காக மிகவும் பழமை வாய்ந்த லட்சக்கணக்கான மரங்கள் பல வருடங்களுக்கு முன் வெட்டி அழிக்கப்பட்டது. இதனால், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக ஓமலூர் உள்ளிட்ட வட்டார கிராமங்களில் மழை பொழிவே இல்லாமல் வறட்சி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து நீர் நிலைகள் வறண்டு வறட்சி நிலவி, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துகொண்டே செல்கிறது.
சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி அகற்றாமல் உயிருடன் பிடுங்கி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாற்று இடத்தில் உயிருடன் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசின் ஆணையின்படி தற்போது சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை குப்பூர் பகுதியில், மழைநீர் கால்வாய் அமைப்பதற்கும், சாலையை விரிவாக்கம் செய்வதற்குமான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதில், அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை அறிந்த தமிழக அரசு மரங்களை வெட்டி எடுக்காமல், மாற்று இடங்களில் பிடுங்கி வைக்க ஆணையிட்டது. இந்த ஆணையின்படி சாலையோரம் வளர்ந்துவரும் மரங்களை வெட்டி அழிக்காமல் மாற்று இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.
தொடர்ந்து மரங்கள் நடுவதற்கு ஏதுவாக பள்ளம் தோண்டி மரங்கள் பட்டுப்போகாமல், வேர் பிடித்து வளரும் வகையில் உரம், மரங்கள் வளர ஏற்ற கலவை மற்றும் மண்ணை கொட்டி தயார் நிலையில் வைத்தனர். பின்னர் சாலையில் இருந்த மரங்களை சுற்றிலும் மண்ணை அகற்றி, பள்ளம் தோண்டி மரங்களின் பக்கவாட்டு வேர்களை பாதியாக விட்டு வெட்டினர். பின்னர் ஆணிவேர் பகுதியில் சுமார் ஐந்தடி ஆழம் வரை விட்டு, பெரிய பொக்லைன் வாகனம் மூலம் வேருடன் மரத்தை பிடுங்கினர். தொடர்ந்து சாலையோரத்தில் மரம் நடுவதற்காக ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் மரத்தை நட்டனர்.
சாலையோர மரங்களை வெட்டி அகற்றாமல் உயிருடன் பிடுங்கி மாற்று இடத்தில் வைத்து பாதுகாப்பு! இதையடுத்து மரத்தின் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக நடப்பட்ட மரத்தை சுற்றிலும் வைக்கோல்போர் போட்டு அதற்கு தண்ணீர் விட்டனர். அதனால், மரம் பட்டுபோகாமல் நன்றாக உள்ளது. சாலை அமைக்க பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்களை வெட்டி அழிக்காமல் , முழு மரத்தையும் மாற்று இடத்தில் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.