சேலம்:திருநங்கைகள், திருநம்பிகள் என்ற சொல்பதமே சமூக காலமாகத்தான் மக்களிடையே பயன்படுத்தப்படுகிறது. ஆண்,பெண் என்ற வரையறைகளுக்கு அல்லாத மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் இப்போது சமூகத்தால் கவனம் பெற்றுவருகிறது.
பல தடைகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, தனக்கான அடையாளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் திருநங்கை ரூபா. இவர் இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி முதற்கட்ட தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்றார்.
உடல் தகுதித்தேர்வு
சேலம் குமரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் சேலம், நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 460 பெண்கள் பங்கேற்றனர்.
அதில் ஓட்டப்பந்தயம், உயரம் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா. திருநங்கையான இவர் நேற்று (ஆகஸ்ட்5) நடந்த உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றார்.
இவரது முயற்சியை காவல் துறை அலுவலர்கள், தேர்வர்கள் பாராட்டினர். கட்டட பொறியாளர் பட்டம் பெற்ற இவர், தனது பெற்றோரின் வழிகாட்டுதலின்படி அரசுப் பணியில் சேர வேண்டும் என முடிவுசெய்துள்ளார்.
அதை தனது லட்சியமாகக் கருதி காவல் துறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
காவலர் உடல்தகுதித் தேர்வில் திருநங்கை தேர்ச்சி முன்னதாக காவல் துறையில் இணைந்த பிரித்திகா யாஷினி, தங்களைப் போல முன்னேறத் துடிப்பவர்களுக்கு முன்மாதிரி என ரூபா பெருமிதம் பொங்கத் தெரிவித்துள்ளார். சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக ரூபாவும் மாறும் காலம் விரைவில் வரும்.
இதையும் படிங்க: தன்னம்பிக்கை தளராத திருநங்கையின் செம்ம டேஸ்ட் தேநீர் கடை!