சேலம்: சூரமங்கலம் அடுத்த டால்மியா போர்டு பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான வெள்ளைக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கம் கடந்த 13 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், சுரங்கத்தில் இருந்து வெள்ளைக் கல்லை திருட்டுத்தனமாக வெட்டி லாரிகளில் கடத்தும் சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்து, வெள்ளைக்கல் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்த டால்மியா போர்டு பகுதியில் செக்போஸ்ட் அமைத்தனர்.
இதனால், கடந்த சில மாதங்களாக கடத்தல் சம்பவம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், சென்ற சில வாரங்களாக கடத்தல் கும்பல் மீண்டும் தங்களது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விட்டது. பகல் இரவு என்று பாராமல் 24 மணி நேரமும் தினக் கூலிக்கு ஆட்களை அமர்த்தி வெள்ளைக்கல் சுரங்கத்தில் கற்களை வெட்டி மூட்டைகளாக கட்டி, லாரிகளில் கடத்தல் கும்பல் எடுத்துச் சென்றது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் டால்மியா போர்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், நேற்று மதியம் வெள்ளைக்கல் சுரங்கப் பகுதிக்கு வந்த தாசில்தார் கள ஆய்வு மேற்கொண்டு, பல நூறு டன் வெள்ளை கற்கள் மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார் .
இதனையடுத்து அவற்றை கைப்பற்றி 'டேன் மேக்' நிறுவனத்திற்கு அனுப்பிட தாசில்தார் அருள் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டார். உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரி கொண்டு வரப்பட்டு அவற்றின் மூலம் சுமார் 40 டன் அளவிலான வெள்ளைக் கல் மட்டுமே நேற்று மாலை வரை டேன் மேக் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மீதமுள்ள வெள்ளை கற்களை இன்று எடுக்கலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்த நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் வெள்ளைக் கல் மூட்டைகளை அள்ளிச் சென்றனர்.
அப்போது, லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் காயம் அடைந்தும் உள்ளார். ஆனால், கவிழ்ந்த லாரியை கடத்தல் கும்பல் கிரேன் வைத்து தூக்கி மீட்டது. கடத்தல் நடக்காது என்ற நம்பிக்கையில் செக் போஸ்ட் திறந்தே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில் கடத்தல் நடப்பதை அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் செக்போஸ்ட்டை மூடி வைத்துள்ளனர்.