தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத மக்களிடமிருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 25 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில்,
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொடர்பான அரசின் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தான் இந்நோய் பரவலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் அபராதம் விதித்திட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி,
தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை மீறும் நபர்களுக்கு ரூ.500/-
முற்றிலும் முகக் கவசம் அணியாத வர்கள் அல்லது வாய், முகத்தை மறைக்கும் வகையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200/-
பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு ரூ.500/-
சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500/-
சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அல்லது பொது இடங்களில் செயல்பாட்டு நடைமுறை விதிகளை மீறும் நபர்களுக்கு ரூ.5,000/-
கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500/-
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிகளை மீறும் வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,000/-
அரசு விதிமுறைகளின்படி மேற்கண்ட விதிமீறலுக்கான தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை மீறிய 15 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம் ரூ.7,500 அபராதமும், முற்றிலும் முகக்கவசம் அணியாதவர்கள் அல்லது வாய், முகத்தை மறைக்கும் வகையில் முகக்கவசம் அணியாத 12,039 நபர்களுக்கு தலா ரூ.200/- வீதம் ரூ. 24.08 லட்சம் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 117 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம் ரூ.58,500 அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 236 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம் ரூ.1.18 லட்சம் அபராதமும் என சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 25,97,800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையுடன் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.