சேலம்: கடந்த ஒரு மாதமாக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததையடுத்து, உழவர் சந்தை மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் உள்ள 15 நியாய விலைக் கடை குறைந்த விலைக்கு, தக்காளி விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. முதல் கட்டமாக சேலம் என்ஜிஜிஓ கூட்டுறவு பண்டக சாலையில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனையை சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தொடங்கி வைத்தார்.
சேலம் கூட்டுறவுக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை! - tomato sale
சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 15 கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ வீதம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வரத்துக்கு ஏற்றவாறு தக்காளி விற்பனை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விளைச்சல் குறைந்ததை அடுத்து, கடந்த இரண்டு வார காலமாக தக்காளி கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர், தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. சேலத்தில் பல இடங்களில் உணவகங்களில் தக்காளி சட்னி கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் முதல் கட்டமாக 15 இடங்களில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள என்ஜிஜிஓ கூட்டுறவு பண்டகசாலையில் முதல் விற்பனையை இன்று (ஜூலை 11ஆம் தேதி) சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மற்றும் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை பெற்று செல்கின்றனர்.
அதேபோல சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 15 கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ வீதம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வரத்துக்கு ஏற்றவாறு தக்காளி விற்பனை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சேலத்தில் வார மற்றும் உழவர் சந்தைகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்கள் மூலம் தக்காளி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறைந்த விலைக்கு கூட்டுறவு சங்கங்களில் தக்காளி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால், தற்போது பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தானாக முன்வந்து தக்காளியை வெளியே கொண்டு வர முடியும். இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாநகரில் தில்லை நகர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தை அடுத்துள்ள தியாகி வீரைய்யர் தெரு, ஆனந்தா பாலம், எம்டிஎஸ் நகர், சுப்பிரமணிய நகர், பாரதி தெரு, அம்மாபேட்டை கருமாரியம்மன் கோவில் தெரு, தாதம்பட்டி, முல்லை நகர், சீரங்கபாளையம் வி.சி. ரோடு, மருதநாயகம் தெரு, சூரமங்கலம் மெயின் ரோடு, சொர்ணபுரி ஆகிய 15 இடங்களில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை பறக்கும் மின்சார ரயில் நிலையங்களில் சிறப்பு பாதுகாப்பு குழு!