ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வன் (26). குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் இளமதி (23). இவர்கள் இருவரும் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். செல்வன், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினராக இருப்பதால், அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி திருமணம் நடத்தி வைக்குமாறு உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று காலை 11 மணிக்கு இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அதேப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில் செல்வனும், இளமதியும் மாலை 5 மணி வரை இருந்துள்ளனர்.
பிறகு செல்வனின் நண்பரான சரவணபரத் என்பவரை சந்திப்பதற்காக, அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்றுள்ளனர். இரவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேர் ஈஸ்வரனை தாக்கி அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர்.
அதே போன்று இளமதியும், செல்வனும், அவருடைய நண்பரான சரவணபரத்துடன் இருசக்கர வாகனத்தில் உக்கம்பருத்திக்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே அந்த சிலர் அவர்களை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து தம்பதியரான இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிய நபர்கள், சரவணபரத்தை தாக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ஈஸ்வரன் கடத்தப்பட்டது குறித்து, காவலாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவலாண்டியூர் ஈஸ்வரன் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.