தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவில் வேலை நிறுத்தம்: தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை! - உள்ளாட்சிகளை

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளை தனியார் மயமாக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்யப்போவதாக உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 6, 2023, 10:18 PM IST

ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம்:தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கும் வகையில் தனியார் மயமாக்கும் முயற்சிக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சேலம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்து திரளான உள்ளாட்சித் துறை பணியாளர்கள் மற்றும் சம்மேளனத்தின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு நெருக்கடி தரும் வகையிலும் ஒப்பந்த பணியாளர்களை வேலையை இழக்கச் செய்யும் வகையில் அரசு கொண்டுவந்த 'அவுட்சோர்சிங்' முறையை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களின் ஊதிய பணப் பலன்களை விரைந்து வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகள் அமைப்புகளில் தனியார் மையமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றார். இதன் ஒருபகுதியாக, தூய்மைப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

இதனால் பணி பாதுகாப்பில்லை, ஊதிய உத்தரவாதம் இல்லை, பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுகாதாரமான குடிநீர் பயன்பாட்டிற்கும் உத்தரவாதம் இல்லை என்று குற்றம்சாட்டினார். எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 152 ,139, 113, 114, 116 உள்ளிட்ட அனைத்து அரசாணைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த ஆணைகள் சமூக நீதிக்கு எதிரானது என்றும் சம நீதிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிரானது என்றும் அடுக்கக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆகவே, இந்த அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தூய்மைப்பணியாளர்களை தள்ளி உள்ளனர்' என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'அரசாங்கமே குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளதாகவும் அதிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரே, ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தினக்கூலியை நிர்ணயம் செய்வதாகவும் இது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யச் சட்டத்தில் இடமில்லை என்றும் குறைந்தபட்ச ஊதியத்தைப் பொருத்தவரை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், உள்ளாட்சித்துறையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் குறைந்தபட்ச ஊதியம், தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், அதனையும் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தே அரசு, 2017-ல் மீண்டும் உள்ளாட்சித்துறை ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தூய்மைத்தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்யும் பணத்தை நிர்வாகம் பி.எஃப். (PF) நிறுவனத்தில் செலுத்துவதில்லை என்றும் தப்பித் தவறிச் செலுத்தினாலும் அந்தப் பணம் தொழிலாளர்களுக்குச் சென்று சேர்வதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு ஒப்பந்த முறை தொழிலாளர்களை நியமிப்பது, அவர்களைச் சுரண்டுவதற்காகவே என்றார். இதனால், சமூக நீதியும் சமநீதியும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு உள்ளதாகவும், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வட மாநிலங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி, அம்மாநில அரசுகளைப் பணிய வைத்தது போல , தமிழ்நாட்டிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கவும் தூய்மைப்பணியாளர்கள் தயங்க மாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Tomato: ரேஷனில் தக்காளி விற்பதால் வெளிச்சந்தையில் தக்காளி விலை குறைவு: அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details